மின்சார பைக்குகளை தயாரிக்க புதிய பிராண்டு – பஜாஜ் அர்பனைட்

பஜாஜ் அர்பனைட் என்ற மின்சார பைக் மற்றும் மூன்று சக்கர வாங்களுக்கு என பிரத்யேக பிராண்டினை 2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

பஜாஜ் அர்பனைட்

இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனம் கேடிஎம், ஹஸ்க்வர்னா, டிரையம்ப் உள்ளிட்ட பிராண்டுகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்தியாவில் 200சிசி முதல் 600சிசி வரையிலான பிரிவில் மிகப்பெரிய சந்தை மதிப்பினை கைப்பற்றுவதற்கு பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவன கூட்டணியில் 250சிசி முதல் 650சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் மிகவும் சவாலான விலையிலும் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

சர்வதேச அளவில் மோட்டார் துறை மின்சார கார்கள் மற்றும் பைக்குகளை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ள நிலையில்,இந்திய சந்தையில் 2030 ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தயாரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.

சமீபத்தில் லைவ்மின்ட் பத்திரிக்கைக்கு  பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் அளித்துள்ள பேட்டியில் 2020 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலை மற்றும் சிறப்பான ரேஞ்சு கொண்ட மின்சார மோட்டார்சைக்கிள் மாடல்களை அர்பனைட் என்ற பிராண்டு பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் 4 சக்கர வாகன துறையில் டெஸ்லா மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பாளராக விளங்குவதனை போல இரு சக்கர வாகன துறையின் டெஸ்லா நிறுவனமாக பஜாஜ் அர்பனைட் விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். அர்பனைட் பிராண்டில் பைக்குகள் தவிர மூன்று சக்கர ஆட்டோக்களும் தயாரிக்கப்படலாம்.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிப்பதில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் முன்னணி வகித்து வருகின்றது. நாட்டில் 300 க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. மேலும் சமீபத்தில் ஏதர் எனர்ஜி என்ற ஸ்டார்டப் நிறவனம் S340 என்ற மின்சார ஸ்கூட்டரை தயாரித்து வரும் நிலையில், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ரூ.200 கோடி வரை ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் எஸ்340 ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் பல்வேறு நகரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் புனேவைச் சேர்ந்த டார்க் மோட்டார் சைக்கிள் நிறுவனம் டி6எக்ஸ் என்ற ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் பைக் ஒன்றை ரூ.1.24 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அடுத்த 6-9 மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

 

 

Recommended For You