விரைவில்.., இந்தியாவில் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது

0

டெஸ்லா மாடல் 3

நான்கு ஆண்டுகளாக இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்ற டெஸ்லா மின்சார கார்களின் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் மாடல் 3 காரை விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Google News

டெஸ்லா மாடல் 3

முதற்கட்டமாக முழுமையாக வடிவமைக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட உள்ள காரின் விலை ரூ.50 லட்சம் முதல் ரூ. 60 லட்சத்துக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற டெஸ்லா மாடல் 3 மின்சார கார் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 381 கிமீ முதல் 580 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையிலான மாறுபட்ட வேரியண்ட்களுடன் விரைவு சார்ஜர் மூலமாக வெறும் 30 நிமிடத்தில் 80 % சார்ஜிங் ஏறும் திறனை கொண்டதாக விளங்குகின்றது.

சர்வதேச அளவில் மாடல் 3 காரில் மூன்று விதமான வேரியண்டுகள் விற்பனை செய்யப்படுகின்றது. இரட்டை மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட மாடல் 3 காரின் பேஸ் வேரியண்ட் 283 Bhp பவர் மற்றும்  450 Nm டார்க் வெளிப்படுத்தும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 225 கிமீ மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 423 கிமீ பயணிக்கலாம்.

டாப் வேரியண்ட் 450 Bhp மற்றும் 639 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 261 கிமீ ஆக உள்ளது. இதன் அதிகபட்ச பயண தொலைவு 507 கிமீ ஆகும்.

அதிக தொலைவு வழங்கும் வகையிலான வேரியண்ட் மணிக்கு 230 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், அதிகபட்ச பயண தொலைவு 570 கிமீ ஆகும்.

எப்பொழுது அறிமுகம் ?

முதற்கட்டமாக இந்நிறுவனம் குறைந்த விலையில் விற்பனை செய்கின்ற மாடல் 3 காரை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. அனேகமாக 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வெளியிடப்பட உள்ள டெஸ்லா கார் ஆடம்பர வசதிகளை பெற்றிருப்பதனால் பெரும் பணம் படைத்தவர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெறக்கூடும்.

2020 ஆம் ஆண்டின் ஜனவரி அல்லது அடுத்த சில மாதங்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு ஆண்டின் மத்தியில் அல்லது இறுதிக்குள் டெலிவரி துவங்க வாய்புள்ளது.

இந்தியாவில் டெஸ்லா ஆலை துவங்குமா ?

டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் ஆலையை கட்டமைப்பதற்கான முயற்சிகளில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இந்நிறுவன ஆலை எப்பொழுது இந்தியாவில் துவங்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மாடல் 3, மாடல் S, மாடல் Y, மற்றும் மாடல் X ஆகிய கார்களை விற்பனை செய்து வருகின்றது.

உதவி – ETAuto