டெக் மற்றும் மோட்டார் நிறுவனங்கள் மிக கடுமையாக முயன்று வரும் தானியங்கி கார் நுட்பத்தினை செயல்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்பதனால் ஓட்டுனரில்லா கார்களை இந்தியாவில் அனுமதிக்க இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஓட்டுனரில்லா கார்கள்
மெர்சிடிஸ், வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் கூகுள், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் டிரைவரில்லா கார் நுட்பத்தை இந்திய சந்தையில் அனுமதிக்க வாய்ப்பிலை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி ஓட்டுனரில்லா கார்கள் பற்றி கூறுகையில் எந்த காரணத்தை முன்னிட்டும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் டிரைவரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதிக்க இயலாது என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் 22 லட்சத்துக்கு மேற்பட்ட வணிகரீதியான டிரைவர்கள் தேவை இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 100 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் இதன் வாயிலாக 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன சட்டம் (திருத்தம்) மசோதா 2017-ல் , தானியங்கி கார் போன்ற புதிய தொழில்நுட்பத்தின் சோதனைகளுக்கு அனுமதிக்கும் விதிகள் உள்ளன. “வாகன பொறியியல் துறைகளில் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுகளை மேம்படுத்துவதற்காக, இது வாகனங்கள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டில் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த சட்டத்தின் விதிமுறைகளில் ஒன்று பொது மக்கள் பயன்படுத்துவதிலிருந்து ஒட்டுனரில்லா கார்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் வகையில் சட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் மாற்று எரிபொருளாக மின்சார கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எந்த வரிச்சலுகையும் வழங்கப்படாது என உறுதிப்படுத்தியுள்ளார்.
சாலையில் மின்சார கார்களை அதிகரிக்கும் நோக்கிலான திட்ட வரைவை செயல்படுத்துவதற்கான தீவரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் நாடு முழுவதும் உள்ள 180,000 பொது போக்குவரத்துத் துறை பேருந்துகளில் மின்சாரம் சார்ந்த வாகனங்களாக இயக்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கவும், பேருந்து நிலையங்களில் இதற்கு உண்டான அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.