லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்ட தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம், டிராபிக் போலீஸ் அதை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவித்து உள்ளது. பொதுவாக சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் போலீசார், லைசன்ஸ், ஆர்சி புக் இன்சூரன்ஸ் கேட்பது வழக்கம். லைசன்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டு, அதன் டிஜிட்டல் காப்பியை காட்டினால் அதை பொதுவாக எந்த மாநில போலீசும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்காக தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.

இந்த நிலையில், இனி லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்ட தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக போலீசிடம் நாம் காட்ட முடியும். அதை போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வெறுமனே சேவ் செய்திருக்கும் காப்பிகளை காட்ட முடியாது. டிஜி லாக்கர், எம்பரிவாகன் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த லாக்கர் ஆப்களில் பாதுகாப்பாக சேவ் செய்து வைக்கப்பட்டு இருக்கும் வடிவத்தில் ஆவணங்களை காட்ட வேண்டும். அப்போது மட்டுமே இந்த ஆவணங்களை விஷமிகள் திருட முடியாது. எல்லா மாநிலத்திற்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.