இந்தியாவில் 350cc-க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றப்பட்டுள்ளதால், ராயல் என்ஃபீல்டு உட்பட சில நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையி்ல், மற்ற தயாரிப்பாளர்களில் ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், மற்றும் ஏப்ரிலியா, பஜாஜ் போன்றவற்றின் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சில மாதங்கள் அல்லது பண்டிகை காலம் வரை தொடர்ந்து தற்பொழுதுள்ள ஜிஎஸ்டி வரி தொடரும் என அறிவித்துள்ளன.
ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட X440 மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கும் எனவும், கூடுதலாக செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை நிறுவனமே ஏற்றுக் கொள்ளுவதாக அறிவித்துள்ளது. ஆனால் மேவ்ரிக் 440 தற்பொழுது சந்தையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் கேடிஎம் நிறுவனத்தின் 390 டியூக், ஆர்சி 390, அட்வென்ச்சர் 390 உள்ளிட்ட மாடல்களுடன் என்டூரா ஆர் 390 போன்றவை எல்லாம் தற்பொழுதைக்கு எந்த ஜிஎஸ்டி மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட உள்ளது.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 400cc என்ஜின் பெற்ற ஸ்பீடு டி4, ஸ்பீடு 400, ஸ்க்ராம்பளர் 400 உள்ளிட்ட மாடல்களின் விலையும் தற்பொழுது எந்த மாற்றமும் இல்லை. கூடுதலாக இந்நிறுவனம் தற்பொழுதுள்ள 400cc என்ஜினுக்கு பதிலாக 350ccக்கு குறைந்த என்ஜினை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 400 மற்றும் டோமினா் 400 ஆகியவற்றின் விலையும் தற்பொழுது எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரிலியா நிறுவனத்தின் Tuono 457 மற்றும் ஆர்எஸ் 457 என இரண்டின் விலையும் தற்பொழுது எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி 2.0 மாற்றத்தை தற்காலிகமாக எதிர்கொள்ளும் வகையிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்நிறுவனங்கள் சில மாதங்களுக்கு இந்த சலுகையை தொடர வாய்ப்புள்ளதால், இதனால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை விலை குறைவாக கிடைக்க உள்ளது.