உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல் – டீசல் விலை…

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 56 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி அறிவித்த பின் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் முறை அமலுக்கு வந்ததும் தினமும் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இது கடந்த மே மாதம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டது.

கர்நாடக தேர்தலுக்கு பின் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. அதன்பின்பும் பைசா கணக்கில் தினமும் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் தற்போது இமாலய விலையை அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் தினமும் உயரும் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெட்ரோல் 2.98 ரூபாயும், டீசல் 3.57 ரூபாயும் உயர்ந்துள்ளது. பெட்ரோல்: ஆகஸ்ட் 1 – 79.26, ஆகஸ்ட் 10 – 80,13, ஆகஸ்ட் 15 – 80.14, ஆகஸ்ட் 25 – 80.69, ஆகஸ்ட் 31 – 81.58, செப்டம்பர் 3 – 82.24 ஆக உள்ளது. டீசல்: ஆகஸ்ட் 1 – 71.62, ஆகஸ்ட் 10 – 72.43, ஆகஸ்ட் 15 – 72.59, ஆகஸ்ட் 25 – 73.08, ஆகஸ்ட் 31 – 74.18, செப்டம்பர் 3 -75.19 ஆக உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளிநாட்டு பிரச்னைகள் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுத்து அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.82.62 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.