100% வரிவிலக்கு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 வெளியீடு

0

e2o

தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கவும், தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019-யினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் மாநிலங்களில் அதிக வாகனங்களை கொண்ட இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது. மேலும் புதிய மின்சார வாகன கொள்கையின் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு மற்றும் 1,50,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்த இயலும் என அரசு எதிர்பார்க்கின்றது. அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு, 2022ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும்.

மேலும், மின்சார வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தற்போதுள்ள மூலதன மானிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி வரம்பை விட 20 சதவிகிதம் கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 3*3 கிரீட் சார்ஜிங் நிலையங்களை சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நிறுவவுள்ளது. மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீக்கு ஒரு சார்ஜிங் நிலையத்தை இருபுறங்களிலும் நிறுவுவதுடன் ஃபாஸ்ட் மற்றும் ஸ்லோவ் சார்ஜிங் என இரண்டையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், தனியார் முதலீட்டினால் ஏற்படுத்தப்படுகின்ற சார்ஜிங் நிலையங்களுக்கு மானியம் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.