எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் பன்னிரெண்டு வருடங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
வாகனத்தின் இன்ஜினுக்கு அருகே உள்ள உலோக பாகங்களுக்கு பதிலாக, அதிக வெப்பத்தைத் தாங்கும் பிளாஸ்டிக்கால் ஆன பாகங்களை உருவாக்ககும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
கார்களின் எடையை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அத்துறையின் முக்கிய கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
“அதிக மாசுபாட்டை உருவாக்கும் கார்கள், குறிப்பாக எஸ்.யு.வி. வகை கார்கள், அல்லது கனரக வாகனங்களின் எடையை விரைவில் கூடுமானவரை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று ஐ.ஹெச்.எஸ் மார்க்கிட் என்னும் பல்துறை ஆய்வு நிறுவனத்தின் வாகன கூறுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பவுலோ மார்ட்டினோ கூறுகிறார்.
எடை குறைந்த கார்களுக்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும். வாகனத்தின் எடையில் 10% குறைந்தால் அது வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டை 8% வரை குறைக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை கூறுகிறது.
தயாரிப்பாளர்கள் மின்சக்தியில் இயங்கும் கார்களையும் இலகுவாக்குவதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தாலே அதிக தூரம் சென்று கார் உரிமையாளர்களின் கவலையைத் தீர்க்குமென்று மார்டினோ தெரிவித்தார்.
இங்குதான் மரம் உள்ளே வருகிறது. இதுவரை, வரை மரம் கப்பல் கட்டவும், வீடுகள் மற்றும் மரச்சாமான்கள் தயாரிக்கவும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள கியோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மரக் கூழில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவிதமான பொருள் எஃகு போன்று வலுவானதாகவும் 80% இலகுவானதாகவும் இருக்குமென்று கூறுகிறார்கள்.
மில்லியன் கணக்கான செல்லுலோஸ், நானோஃபைர்ஸ் (சிஎன்எஃப்) மற்றும் சிஎன்எஃப் பிளாஸ்டிக்காக சிதறடிக்கப்பட்டு, வேதியியல் சோதனைக்கு இந்த மரக்கூழ் உட்படுத்தப்படுகிறது.
சிஎன்எஃப்களை பிளாஸ்டிக்கால் வளைப்பதன் மூலம் அது வலுவான கலப்பின பொருளை உருவாக்குகிறது. அது எஃக்குக்கு மாற்றான உதிரிப்பாகங்களை உருவாக்கப் பயன்படுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த பொருளானது காரினுடைய கதவுகள், மோதலை தவிர்க்கும் அமைப்பு மற்றும் காரின் மேற்பகுதி மூடி போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுமென்று கியோட்டோ பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான பேராசிரியர் ஹிரோயுகி யானோ கூறியுள்ளார்.
பேனாவின் மை முதல் ஒளி ஊடுருவுகிற திரைகள் வரை என பல்வேறு பொருட்ககளில் செல்லுலோஸ் நானோ ஃபைபர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கார்பன் ஃபைபர் போன்ற வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்த இலகுரக பொருட்களுக்கிடையே ஏராளமான போட்டிகள் நிலவும் நிலையில், சிஎன்எஃப்-அடிப்படையிலான பாகங்கள் அதற்கு சாத்தியமான மாற்றாக இருக்க முடியும் என்று நம்புகிறார் பேராசிரியர் யானோ.
ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு பிளாஸ்டிக் மூலம் கார் பாகங்களை தயாரிக்கும் முயற்சியில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளார்கள்.
ஜப்பானின் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியரான டாட்சுனோ கனெகோ, உயிரியல் மூலக்கூறுகளினால் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உருவாக்கி வருகிறார்.
இந்த புதிய பொருளும் எஃகைவிட இலகுவான மற்றும் 300 செல்ஷியஸ் வெப்பம் வரை தாங்கவல்லதாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“வெப்பம் தாங்க முடியாமல் போவதால், இன்ஜினுக்கு அருகிலிருக்கும் வெப்பப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுவதில்லை” என பேராசிரியர் கனெகோ கூறுகிறார்.
“ஆனால், நான் உருவாக்கிய உயிரி பிளாஸ்டிக்குகள் அதிக வெப்பநிலையை தாங்கக்கூடும்” என்கிறார்.
இவர் பல ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள், கார் பகுதி மற்றும் மின்னணு உற்பத்தியாளர்களுடனும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், இன்னும் ஐந்தாண்டுகளில் எஃகுக்கு ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கும் பொருளைப் பயன்படுத்துவதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அது வாகனத்தின் எடையை குறைந்துவிடும் என்பதே ஆகும்.
இலகுவான பிளாஸ்டிக் கார் பாகங்கள் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கின்றன. ஆனால், அவற்றின் உற்பத்தி பிற சுற்றுச்சூழல் அபாயங்களைக் கொண்டுவரவில்லையா?
கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்தி உயிரி பிளாஸ்டிக் போன்ற மாற்றுப் பொருட்களை தயாரிப்பது மாசுபாட்டை அதிகரிக்கக்கூடும் என்று பேராசிரியர் கனெகோ ஒப்புக்கொள்கிறார், ஏனெனில் அத்தகைய கழிவுப்பொருட்கள் மக்கும் தன்மை கொண்டவையல்ல.
ஆனால், அவர் தான் உருவாக்கியுள்ள பொருட்கள், பாரம்பரிய பிளாஸ்டிக்கை விட சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று கருதுகிறார்.
வழக்கமான பெட்ரோலிய அடிப்படையிலான பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி பெரிய அளவிலான கார்பன்-டை-ஆக்சைடை உருவாக்குகிறது. அதேசமயம் நுண்ணுயிர்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி-பிளாஸ்டிக்குகள் குறைந்த அளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றன என்று அவர் கூறுகிறார்.
“பசுமையான” பொருட்களைப் பயன்படுத்துவதற்கான எண்ணம், வாகன உற்பத்தியாளர்களிடையே வேகத்தை எடுத்துள்ளது.
மாசு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் 2040 ஆம் ஆண்டில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை தடை செய்ய இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனா, 2025 ஆம் ஆண்டில் அதன் வாகன விற்பனையில் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பங்கை மின்சார பேட்டரி கார்கள் மற்றும் மற்ற சுற்றுசூழலுக்கு உகந்த கார்களை விற்று தன் இலக்கை எட்டிட வேண்டும் என்று விரும்புகிறது.
குறைந்த எடை கொண்ட கார்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திய பி.எம்.டபிள்யூ, கார்பன் ஃபைபரை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் கடந்த மாதம் கார்பன் ஃபைபரால் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் கூரையுடைய ஒரு புதிய மெலிதான M5 செடானை அறிமுகப்படுத்தியது.
டொயோட்டா நிறுவனம் அதன் பிரியஸ் பிரைம் மற்றும் லெக்ஸஸ் எல்சி 500 வகை கார்களில் மேற்கண்ட அதே பொருளைப் பயன்படுத்தி எடையை குறைத்து, ப்ரியஸில் பேட்டரி அளவை அதிகரித்துள்ளது.
ஜாகுவார், அலுமினியம் மீது கவனம் செலுத்துகிறது. அலுமினியம் எஃகுக்கு சமமான அளவு மூன்றில் ஒரு பங்கு எடை மட்டுமே உள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.
“ஒரு அலுமினிய அடிப்பீடம் (Chassis) மூலம் குறைக்கப்பட்ட ஒவ்வொரு 100 கி.கி. எடையும் வாகனத்தின் கார்பன் டை ஆக்சைடு வெளியாகும் அளவை ஒரு கிலோமீட்டருக்கு 9 கிராம் குறைக்க உதவுகிறது. மேலும், அதன் வாழ்நாள் எரிபொருள் பயன்பாட்டில் 800 லிட்டர் வரை சேமிக்கிறது,” என்று ஜாகுவார் நிறுவனம் கூறுகிறது.
காரின் மேற்புற கண்ணாடிகள் மற்றும் மற்ற கண்ணாடி தொடர்புடைய உதிரி பாகங்களில் பயன்படுத்தும் கொரில்லா வகை கண்ணாடி தயாரிப்பாளரான கோரிங், தனது உயர்-தொழில்நுட்ப கண்ணாடியானது மற்ற கார்களின் கதவுகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை விட மூன்று மடங்கு மெலிதானது என்று தெரிவித்துள்ளது.
நன்றி — > பிபிசி தமிழ்