வெப்பம் அதிகபட்சமாக 40 டிகிரியை தொட்டு விட்ட இந்த கோடை காலத்தில் நம் உற்ற தோழனாக பயணிக்கும் பைக்குகளை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சம்மரிலும் நம்முடைய பைக்கினை மிக கவனமாக கையாள சில முக்கிய டிப்ஸ் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
சம்மர் பைக் டிப்ஸ்
- உங்கள் பைக்கில் முறையான எஞ்சின் ஆயில் அளவை பராமரிப்பது மிகவும் அவசியம்.
- வெயிலான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதனை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
- டயரின் காற்றழுத்தம் , தேய்மானம் போன்றவற்றை கவனியுங்கள்.
எஞ்சின் ஆயில்
முறையான கால இடைவெளி பராமரிப்பு என்பது வாகனங்களை பராமரிப்பதில் உள்ள மிக முக்கியமான அம்சமாகும். மனிதர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு கட்டாயம் என்பதனை போன்றதே வாகனங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பைக்கின் எஞ்சின் ஆயில் மாற்றுவதுடன் , ஆயில் அளவை சோதிக்க வேண்டியதும் மிக அவசியமாகும்.
பெயின்ட்
புதிதாக பைக் வாங்கியிருந்தாலும் பழைய பைக்காக இருந்தாலும் பைக் பாலீஷ் போன்றவற்றை பயன்படுத்தி பெயின்ட்டை பராமரித்தால் வாகனத்தின் நிறம் மாறாமல் புதிது போல பராமரிக்கலாம்.
டிரைவ்லைன்
பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்லும் செயின்களை முறையான கால இடைவெளியில் சோதனை செய்து செயின் டென்ஷனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பெட்ரோல் டேங்க்
கோடை காலம் முழுவதும் பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரப்புவதனை தவிர்த்திடுங்கள். அதிகபட்சமாக டேங்கின் முக்கால் பாகம் வரை மட்டுமே பெட்ரோலை நிரப்பி வையுங்கள். ஏனெனில் தவறுதலாக நீங்கள் டேங்க் மூடியை சரிவர மூட தவறினாலோ அல்லது வேறு காரணங்களால் பெட்ரோல் மீது வெப்பம் அதிகரித்தால் தீப்பற்றும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் எரிபொருள் எஞ்சினுக்கும் செல்லும் குழாய் பகுதியில் எதேனும் கசிவு இருந்தால் உடனடியாக கவனித்து மாற்றிவிடுங்கள்..
டயர்
டயரில் உள்ள காற்றழுத்தம் வாரம் இரு முறை கட்டாயமாக சோதனை செய்வது மிக அவசியமாகும். ஒனர்ஸ் மேனுவலில் கொடுத்துள்ள காற்றழுத்த PSi (Pounds per Square Inch) அளவுகளை முறையாக பராமரிப்பது நல்லது, முறையான காற்றழுத்தம் பராமரிக்க தவறினால் டயரில் வெடிப்பு ஏற்படவோ அல்லது வேறு எதேனும் தொந்தரவுகளை சந்திக்க நேரும், எனவே முறையான காற்றழுத்தம் டயர் தேய்மானத்தை கருத்தில் கொண்டு டயரை மாற்றிவிடுங்கள்.
பிரேக்
பிரேக் திரவத்தின் அளவு உள்பட தேய்மானம் போன்றவற்றை மிக முக்கியமாக கருத்தில் கொண்டு பைக்கை பராமரியுங்கள். தேய்மானம் அடைந்திருந்தால் பிரேக் லைனர்களை மாற்றி விடுங்கள்.
பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்
சாதரணமாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் பேட்டரிகளுக்கு இருந்தாலும், பெரும்பாலான பைக்குகளுக்கு தற்பொழுது பராமரிப்பு இல்லாத பேட்டரிகள் வழங்கப்பட்டு வருகின்றது. லைட்டிங் வேலைப்பாடுகள் அல்லது எக்ஸ்ட்ரா ஹார்ன் போன்றவற்றை வெளியிடங்களில் பொருத்தியிருந்தால் முறையான வயரிங் செய்திருப்பது மிக அவசியமாகும்.
மரங்கள் தேவை
இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல கார்களையும் கோடை காலத்தில் வெயிலான பகுதியில் நிறுத்துவதனை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், மிக முக்கியமான மற்றொன்று மன்டைய பிளக்கும் வெயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு தரமற்ற தார்பாய் கொண்டு வாகனத்தை மூடி வைக்காதீர்கள். அதுவே வாகனம் தீப்பற்ற மிக முக்கியமான காரணமாகிவிடும்.