டைம்லர் இந்தியா நிறுவனத்தின் வரத்தக வாகனப் பிரிவின் கீழ் செயல்படும் பாரத் பென்ஸ் நிறுவனம் தனது அனைத்து பேருந்து மற்றும் டிரக்குகளையும் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 என்ஜினை பெற்றதை தொடர்ந்து விற்பனையில் உள்ள மாடலை விட 10 % வரை விலை உயர்வினை சந்திக்க உள்ளது.
இந்நிறுவனத்தின் அனைத்து இலகுரக டிரக்குகள் முதல் பேருந்துகள் வரை அனைத்தும் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முந்தைய என்ஜினை விட கூடுதலாக 20 சதவீத சர்வீஸ் இடைவெளியை வழங்குகின்றது. இந்த வாகனங்களின் பராமரிப்பு செலவு 6 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அறிமுகத்தின் போது பேசிய டைம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் பிரிவு சிஇஒ. திரு சாத்யகம் ஆர்யா கூறுகையில், பாரத்பென்ஸ் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை மிகச் சரியாக பூர்த்தி செய்வதுடன், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப செயல்படவும், சிறப்பான பாதுகாப்பு, அதிகப்படியான எரிபொருள் சிக்கனம், மற்றும் கனெக்கட்டிவிட்டி அம்சங்களை வழங்குகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாடல்களில் முந்தைய டிரக் மற்றும் பஸ்களில் பயன்படுத்தப்பட்டு வந்த OM926 என்ஜின் மற்றும் 4D34i என்ஜின்கள் மேம்படுத்தபட்டு பிஎஸ்6 முறைக்கு மாற்றபட்டுள்ளது. அடுத்தப்படியாக இந்த வாகனங்களுக்கு 6 வருட வாரண்டி மற்றும் கூடுதலாக நீட்டிக்கப்பட்ட 8 வருடம் வரை வாரண்டி வழங்கப்படுகின்றது.
டைம்லரின் புதிய தலைமுறை வர்த்தக வாகனங்கள் தொழில்துறையில் முன்னணி எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு, சொகுசு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்களின் தொகுப்பான ‘ProfitTechnology+’ நுட்பத்தை வழங்குகிறது. மேலும் பிஎஸ்6 டிரக்குகள் மற்றும் பேருந்துகளின் தோற்ற அமைப்பு மற்றும் கேபின் வசதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாரத்பென்ஸ் தனது பிஎஸ்6 மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியுள்ள நிலையில் பிஎஸ்6 எரிபொருள் கிடைக்கும் பகுதிகளுக்கு ஏற்ப டெலிவரி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.