ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் குறைந்த விலை பல்சர் 125 பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. பல்சர் 125 மாடல் நியான் நிறத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் இரு சக்கர வாகன விலை, காப்பீடு கட்டணம் மற்றும் சந்தையின் நிலை போன்ற காரணங்களால் இந்திய வாகன சந்தையின் விற்பனை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் பஜாஜின் அடுத்த முயற்சியாக குறைவான விலையில் ஒரு பல்சர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
125 சிசி சந்தையை பொறுத்தவரை ஹோண்டா சிபி ஷைன் , ஹீரோ கிளாமர் போன்ற மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. இந்த மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்த தனது பிரசத்தி பெற்ற பிராண்டான பல்சரை கொண்டு போட்டியை ஏற்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.
புதிய 125 சிசி பல்சர் வரவிருக்கும் பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.45 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.8 பிஹெச்பி 6,000 ஆர்பிஎம்மில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்கும் என கருதப்படுகின்றது. இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரக்கூடும்.
பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வரவுள்ளது. பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய பாடி கிராபிக்ஸ், ஒரே வகையான இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கும்.
சிபிஎஸ் பிரேக்குடன் வரவிருக்கும் பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூபாய் 60,000 முதல் ரூபாய் 64,000 விலைக்குள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.