இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையை துவங்கிய 11 மாதங்களுக்குள் ஒரு லட்சம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து அதிரடியான சாதனையை படைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2019-ல் விற்பனையை துவங்கிய செல்டோஸ் கார் மூலம் தன் சந்தையை இந்தியாவில் துவங்கிய இந்நிறுவனம், இந்த மாடலுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பினால் மிகவும் சவாலான கிரெட்டா எஸ்யூவி உட்பட பல்வேறு மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி 97,745 யூனிட்டுகளை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் விற்பனைக்கு வெளியான பிரீமியம் எம்பிவி ரக மாடல் கார்னிவல் விற்பனை எண்ணிக்கை 3,614 பதிவு செய்துள்ளது. இன்னோவா கிரிஸ்டா காருக்கு போட்டியாக விளங்குகின்றது.

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக விற்பனைக்கு வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற இந்த கார் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி300 உட்பட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.