மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காராக வெளியிடப்பட உள்ள வேகன் ஆர் EV காரை சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்பாக, இந்த மின்சாரை காரை 2020 ஆம் ஆண்டில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் பரவலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இரு சக்கர வாகனங்களில் குறிப்பாக மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜின் அர்பனைட் சேத்தக் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல ரிவோல்ட் ஆர்வி400 போன்ற மாடல்களின் மீதான ஈடுபாடும் அதிகரித்துள்ளது. தற்சமயம் மத்திய அரசினால் வழங்கப்பட்டு வரும் ஃபேம் எனப்படும் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் திட்டத்தின் மானியம் கார்களை பொறுத்தவரை டாக்சி மற்றும் ஃபிளீட் ஆப்ரேட்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. தனிநபர் பயன்பாட்டுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.
அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என அறவிக்கப்பட்டிருந்த மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கான விலை ரூ.12 லட்சம் வரை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய மோட்டார் சந்தையில் ஏற்பட்டுள்ள சுனக்கத்தின் காரணமாக விற்பனையை மேலும் தாமதப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தால் 50க்கு மேற்பட்ட முன்மாதிரி மாடல்கள் சாலை சோதனை செய்யப்பட்டு வுருகின்றது. வேகன் ஆர் காரின் மின்சார மாடல் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் 130 கிமீ பயணிக்க உதவும், அதேநேரம் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-80 சதவீத சார்ஜிங்கை பெற ஒரு மணி நேரத்துக்கு குறைவாகவும், அதேநேரம் சாதாரன ஏசி சார்ஜர் மூலம் 7 மணி நேரம் தேவைப்படும்.
இந்திய சந்தையை பொறுத்தவரை போதிய சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதி இல்லாத காரணம் அதிகப்படியான விலை போன்ற காரணங்களால் நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி தனது எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றது. அதே நேரத்தில் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் வெளியிட்ட கோனா EV அமோக ஆதரவைப் பெற்று 130க்கு மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ளது.
குறைவான ரேஞ்சில் டாடா டீகோர் மற்றும் மஹிந்திரா எலெக்ட்ரிக் வெரிட்டோ மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 EV மற்றும் டாடா நெக்ஸான் EV விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும் டிசம்பர் மாதத்தில் எம்ஜி மோட்டாரின் ZS EV விற்பனைக்கு வரவுள்ளது. அனேகமாக, மாருதி வேகன் ஆர் EV அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு கிடைக்கலாம்.