இந்தியாவில் குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு என பிரத்தியேக விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளதால், பஜாஜ் க்யூட் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.
குவாட்ரிசைக்கிள்
இந்தியாவில் குவாட்ரிசைக்கிள் என்ற பிரிவு வாகனங்களுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த வாகனங்களுக்கான பாதுகாப்பு, மாசு விதிகள் , எடை மற்றும் பல்வேறு அடிப்படை அம்சங்களுக்கு விதிகளை உருவாக்கியுள்ளது.
குவாட்ரிசைக்கிள் வாகனத்தின் அதிகபட்ச எடை 475 கிலோ மட்டும் அமைந்திருக்க வேண்டும். இந்த வாகனங்கள் பெட்ரோல் , டீசல், எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் ஐரோப்பியாவில் உள்ள விதிகளுக்கு ஈடாக அமைந்துள்ளது.
குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி அளித்துள்ளதால், 2012 ஆம் ஆண்டு முதல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படாமல் காத்திருக்கும் குவாட்ரிசைக்கிள் மாடல் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
ஐரோப்பா , ஆப்பரிக்கா , லத்தின் அமெரிக்கா , ஆசியாவில் உள்ள சில நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு பஜாஜ் க்யூட் ஏற்றுமதி செய்ய உள்ளது. பஜாஜ் ஆர்இ60 என்ற பெயருக்கு பதிலாக க்யூட் (QUTE) என பெயரிட்டுள்ளது.
ரூ.1.50 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4ஸ்பார்க் பிளக்குகளை கொண்ட 216சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும்.
பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆகும். 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்சைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.