நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.5.50 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.
நிசான் இணையதளம் மற்றும் டீலர்கள் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது. விலை நாளை அறிவிக்கப்பட்டாலும் டெலிவரி டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் மிகவும் விலை குறைந்த பல்வேறு வசதிகளை வழங்கும் மாடலாக மேக்னைட் எஸ்யூவி காரை பெட்ரோல் இன்ஜின் மட்டும் பெற்றதாக வரவுள்ளது.
மேக்னைட் எஸ்யூவி இன்ஜின் விபரம்
100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சாதாரண 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.
இந்த காரில் XE, XL, XV Upper மற்றும் XV Premium என 4 வேரியண்டில் 20 வகையான மாறுபாடுகளில் கிடைக்க உள்ளது.
போட்டியாளர்கள்
மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர, அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் ரெனோ கிகர் விற்பனைக்கு வரவுள்ளது.
மேக்னைட் விலை எதிர்பார்ப்புகள்
முன்பே நிசான் மேக்னைட் விலை கசிந்துள்ள நிலையில் தொடக்க நிலை வேரியண்ட் ரூ.5.50 லட்சம் முதல் அதிகபட்சமாக டாப் வேரியண்ட் ரூ.9.55 லட்சத்திற்குள் அமையலாம்.