வருகின்ற டிசம்பர் 31, 2017 முதல் இந்திய சந்தையில் கார் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஷெவர்லே நிறுவனம் சர்வீஸ், உதிரிபாகங்கள் மற்றும் வாரண்டி தொடர்பான சேவைகளை தொடர்ந்து வழங்கும் என அறிவித்துள்ளது.
ஷெவர்லே கார்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமான ஷெவர்லே இந்தியா பிரிவு கடந்த சில ஆண்டுகளாக மிக கடுமையான விற்பனை இழப்பை சந்திக்க தொடங்கியதை தொடர்ந்து சந்தையிலிருந்து செவர்லே பிராண்டை விலக்கி கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆனால் ஷெவர்லே நிறுவனத்தின் மகாராஷ்டிரத்தில் உள்ள தாலேகான் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் எந்த மாற்றமும் இல்லை , என அறிவித்துள்ளது.
செவர்லே பிராண்டு இந்தியாவை விட்டு வெளியேறுனாலும் தொடர்ந்து சர்வீஸ் தொடர்பான சேவைகளான கார் சர்வீஸ், உதிரிபாகங்கள் மற்றும் வாரண்டி தொடர்பான சேவைகளை தொடர்ந்து வழங்க உள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என ஜி.எம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவர்லே டீலர்களிடம் இருப்பிலுள்ள கார்களை விற்பனை செய்ய கூடுதலான சலுகைகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்தினாலும், சீனா நாட்டின் கூட்டணி நிறுவனமான எஸ்ஏஐசி-க்கு ஹாலோல் ஆலையை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதனால், செயிக் மோட்டார் கார்ப்பரேஷன் குழுமத்தின் அங்கமான எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டின் மத்தியில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.