இந்திய சந்தையிலிருந்து அமெரிக்கவின் ஜிஎம் நிறுவனத்தின் பிராண்டான செவர்லே சந்தையை விட்டு வெளியேறுவது உறுதியாகியுள்ளது. ஆனால் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்ய உள்ளது.
ஜிஎம் செவர்லே
கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் புதிய பீட், எசென்சியா உள்பட சில மாடல்களை காட்சிப்படுத்திய செவர்லே இந்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற ஜிஎம் கூட்டத்தில் இந்திய சந்தையிலிருந்து கார் விற்பனையை இந்த வருடத்துடன் நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால், இந்திய சந்தையிலிருந்து செவர்லே முழுமையாக வெளியேறாத வகையில் தன்னுடைய தாலேகன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள மாடல்கள் சர்வதேச சந்தைகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதவிர பெங்களூருவில் அமைந்துள்ள தொழிற்நுட்ப பிரிவையும் தொடர்ந்து இயக்க உள்ளது.
இது குறித்து செவர்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய சந்தையில் நீண்ட கால முதலீட்டின் அடிப்படையில் சந்தையின் போட்டியை ஈடுகட்டி லாபத்தை பெற தவறுவதனால் சந்தையிலிருந்து வெளியேறுவதை பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய சந்தையில் முழுமையாக வெளியேறாமல் தங்களுடைய உற்பத்தி ஆலையான தாலேகன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற கார்களை ஏற்றுமதி சந்தைக்கு மட்டுமே அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையிலுருந்து லத்தின் அமெரிக்கா,மெக்சிக்கோ உள்பட பல்வேறு நாடுகளுக்கு கடந்த மார்ச் 31ந் தேதி வரை முடிவடைந்த நிதி ஆண்டில் 70969 கார்கள் ஏற்றுமதி செயப்பட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். மேலும் கடந்த ஏப்ரல் 28,2017ல் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலால் ஆலையை ஜிஎம் மூடியது.
இந்த ஆலையை சீனாவை சேர்ந்த ஜிஎம் குழுமத்தின் கூட்டணி நிறுவனம் எஸ்ஏஐசி குழுமம் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட் வருவதனால் இந்த நிறுவனத்தின் எம்ஜி மோட்டார்ஸ் வாயிலாக ஜிஎம் மறுபிரவேசம் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. செவர்லே பிராண்டின் பீட் மற்றும் தவேரோ போன்ற கார்கள் இந்தியாவில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடல்களாகும்.