உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், கடந்த ஜூன் மாதந்திர விற்பனையில் 704,562 யூனிட்டுகளை விற்பனை செய்து 13 சதவீத வளர்ச்சியை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்றுள்ளது.
ஜூன் 2017 யில் 624,185 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த ஹீரோ பைக் நிறுவனம், அதனுடன் ஒப்பீடுகையில் 13 சதவீத வளர்ச்சி கண்டு மீண்டும் ஒரு முறை அதாவது நான்காவது முறையாக மாதந்திர விற்பனையில் 7 லட்சம் இலக்கை கடந்து 704,562 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இதைத் தவிர இந்நிறுவனம், ஏப்ரல் 2018- ஜூன் 2018 வரையிலான இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டாவது முறையாக 20 லட்சம் வாகனங்களை (2,104,949 வாகனங்கள்) கடந்து விற்பனை சாதனையை அடைந்துள்ளது. கடந்த ஜூலை 2017- செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் முதன்முறையாக 20 லட்சம் வாகனங்களை (2,022,805) கடந்தது குறிப்பிடதக்காதாகும்.
விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரிமியம் ரக சந்தையில் முதன்முறையாக 200சிசி எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் 125 சிசி சந்தையில் மேஸ்ட்ரோ எட்ஜ், டூயட் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் ஹீரோ நிறுவனம் உயர்ந்து வரும் உற்பத்தி செலவீனம், போக்குவரத்து கட்டணம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ரூ. 500 வரை அனைத்து இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.