பியாஜியோ வெய்கிள் இந்தியா நிறுவனத்தில் புதிய இலகுரக வர்த்தக வாகனம் பியாஜியோ போர்ட்டர் 700 ரூ. 3.31 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய போர்ட்டர் 600 மாடலுக்குமாற்றாக வெளியாகியுள்ளது.
பியாஜியோ போர்ட்டர் 700
புதிய போர்ட்டர் 700 மினிடிரக் மாடலில் 14 ஹெச்பி ஆற்றல் மற்றும் 40 என்எம் டார்க்கினை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் 625சிசி ஒற்றை சிலிண்டர் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்சிவி மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ என வழங்கப்பட்டுள்ளது.
போர்ட்டர் சிறிய டிரக்கின் நீளம் 3544 மிமீ, அகலம் 1460மிமீ மற்றும் உயரம் 1738 மிமீ ஆகும். 30 சதுர அடி பரப்பினை கொண்ட லோடிங் செய்யும் பரப்பளவின் நீளம் 1950மிமீ மற்றும் அகலம் 1400மிமீ கொண்டுள்ளது. 218 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்ற போர்ட்டர் 700 டிரக்கின் பேலோடு 700 கிலோகிராம் ஆகும்.
ஒற்றை கேபின் இரு இருக்கை வசதி பெற்றுள்ள போர்ட்டர் 700 டிரக்கில் மிக சிறப்பான இருக்கை மற்றும் கையாளுமை தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான பாடியுடன் வந்துள்ளது. டாடா ஏஸ் மற்றும் மஹிந்திரா ஜீடோ போன்ற வாகனங்களுக்கு கடுமையான சவாலாக விளங்க உள்ளது.
போர்ட்டர் 700 நாடு முழுவதும் உள்ள பியாஜியோ நிறுவனத்தின் 350 க்கு மேற்பட்ட டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை 3 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.