அடுத்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் நுழைய உள்ள பிஎஸ்ஏ குழுமத்தின் பீஜோட் நிறுவனம் தனது பீஜோ 208 காரை தற்காலிக பதிவெண் கொண்ட மாடலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் படங்கள் வெளியாகியுள்ளது.
பீஜோ நிறுவனம்
2020 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ள பிஎஸ்ஏ குழுமத்தின் பீஜோட் நிறுவனம் இந்தியாவின் சிகே பிர்லா குழுமத்தின் ஆதரவுடன் களமிறங்க உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கார்களை உற்பத்தி செய்வதற்கான விரிவாக்க பணிகளை திட்டமிட்டு வருகின்றது. இதுதவிர பவர்ட்ரெயின் சார்ந்த பாகங்களை உருவாக்க பிர்லா நிறுவனத்தின் அங்கமாக ஓசூரில் செயல்படுகின்ற ஏவிடெக் நிறுவனத்திலும் கூடுதலான முதலீட்டை திட்டமிட்டு வருகின்றது.
தமிழக அரசின் அறிக்கையின் படி முதற்கட்டமாக முதலீடு ரூ.3000 கோடி செய்யப்படும். இதில்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் ரூ.1500 கோடியும், உற்பத்தி திட்டங்களான கார் மற்றும் பவர்ட்ரெயின் போன்றவற்றுக்கு ரூ.1500 கோடியும் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடு ரூ.4000 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. எனவே இந்த இரு நிறுவனங்களின் வாயிலாக 2000 க்கு மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் நேரடியாக உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பீஜோ நிறுவனமே அம்பாசிடர் பிராண்டினை காரை ரூ.80 கோடி விலையில் வாங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.
பீஜோ 208 கார்
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்படுகின்ற பீஜோட் 208 மாடல் 2012 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதாகும். இதன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மாடல் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
தற்போது சோதனை செய்யப்படுகின்ற மாடல் வாயிலாக எரிபொருள் சிக்கனம் உள்பட வாகனத்தின் செயல்திறன் மற்றும் கட்டுமானம் சார்ந்த பலவற்றின் தரத்தை இந்திய சாலைகளுக்கு ஏற்ப சோதனை செய்யப்படுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ள மாடல் வாயிலாக ஆதாரங்களை பெறுவதற்கான நடைமுறையாக இதுகருதப்படுகின்றது.