கிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்

0

renault kiger suv teased

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கிகர் உற்பத்தி நிலை மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. குறிப்பாக கான்செப்ட் நிலையில் உள்ள காரின் பெரும்பகுதியை நேரடியாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.

Google News

சமீபத்தில் இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட நிசான் மேக்னைட் காரின் அதே பிளாட்ஃபாரம் மற்றும் இன்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள கிகருக்கு சவாலாக 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற சோனெட், வெனியூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகியவை உள்ளன.

கிகர் எஸ்யூவி இன்ஜின்

ரெனால்ட்-நிசான் கூட்டு நிறுவனத்தின் 1.0L பெட்ரோல் மற்றும் டாப் வேரியண்டில் 1.0L  டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனை பெற உள்ள கிகர் காரின் டர்போ பெட்ரோல் மாடல் 100 hp பவர் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT வேரியண்ட்) வழங்கும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

அடுத்து, குறைந்த விலை வேரியண்டுகளில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கும். இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வாய்ப்புகள் உள்ளது.

டிசைன் அம்சங்கள்

CMF-A+ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகின்ற ரெனோ கிகர் காரின் 80 சதவீத உதிர்பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மிக நேர்த்தியான எஸ்யூவி வடிவமைப்பினை பெற்று முன்புறத்தில் இரண்டு பிரிவுகளாக ஹெட்லைட் வழங்கப்பட்டு மூன்று எல்இடி புராஹெக்டர் கொண்டிருப்பதுடன், அலாய் வீல், எல்இடி டெயில் லைட் கொண்டிருக்கும். ரூஃப் ரெயில் மற்றும் இரு வண்ண கலவை ஆகியவற்றை பெற வாய்ப்புள்ளது.

இன்டிரியர்

தற்போது விற்பனையில் உள்ள ட்ரைபர் காரின் அடிப்படையிலான இன்டிரியரை பெறுவதுடன் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டிருப்பதுடன் தாராளமான இடவசதி பெற்றிருக்கும். கூடுதலாக, 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 அங்குல டிஎஃப்டி  கிளஸ்ட்டர், வாய்ஸ் கன்ட்ரோல் , ரியர் வியூ கேமரா மற்றும் புஷ் ஸ்டார்ட் பட்டன், குரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி அவுண்ட் வியூ மானிட்டர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் ஆகியவற்றை பெற்றிருக்கலாம்.

விலை எதிர்பார்ப்புகள்

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற மேக்னைட் காரின் விலை ரூ.5.54 லட்சத்தில் துவங்குவதனால், அறிமுக சலுகையாக ரெனால்ட் கிகர் விலை குறைவாக ரூ.5.30 லட்சத்திற்குள் துவங்க வாய்ப்புகள் உள்ளது. மேலதிக முழுமையான விபரங்கள் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகும்.