ஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

ஜிப்ட்ரான்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், எதிர்கால மின்சார வாகனங்களுக்கான நுட்பம் மற்றும் பவர்ட்ரெயினை ஜிப்ட்ரான் (Ziptron) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜிப்ட்ரானின் நுட்பத்தை பெற்ற முதல் மாடல் 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

பொதுவாக டாடா நிறுவனம் சமீபகாலமாக பெட்ரோல் என்ஜினை ரெவோட்ரான், டீசல் என்ஜினை ரெவோடார்க் எனக் குறிப்பிட்டு வரும் நிலையில், இதற்கு இணையாகவே எலக்ட்ரிக் கார்களுக்கான நுட்பத்தை ஜிப்ட்ரான் என கொண்டு வந்துள்ளது. இந்த நுட்பத்தில் முதல் மாடலாக அல்ட்ரோஸ் மற்றும் அதனை தொடர்ந்து நெக்ஸான் மின்சார கார் விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய காலநிலை மற்றும் போக்குவரத்து நிலைமைகளை மனதில் வைத்து ஜிப்ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், வழக்கமான மின்சார வாகன வாங்குபவர்களின் செயல்திறன், வரம்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் நிவர்த்தி செய்கிறது என்று டாடா மோட்டார்ஸ் இந்த நுட்பத்தினை பற்றி குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் போது 1 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான சோதனைகளை உள்ளடக்கியிருப்பதுடன் 350 பொறியாளர்களை கொண்ட குழு பணியாற்றியுள்ளது.

முழுமையான நுட்ப விபரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை, தற்போது வந்துள்ள விபரத்தின் படி குறைந்தபட்ச ரேஞ்ச் 250 கிமீ என தொடங்குவதுடன் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் உட்பட லித்தியம் ஐயன் செல் கொண்ட பேட்டரியை பாதுகாக்க லிக்யூடு கூல்டு வசதியுடன், ஐடியல் வெப்பத்தை பராமரிக்கும் நோக்கில் வழங்கப்படும்.  உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டு வாரண்டி வழங்கப்பட உள்ளது.

டாடாவின் மின்சார கார்கள் அனைத்தும் கனெக்கடிவ் டெக்னாலாஜியை அடிப்படையாகவே பெற்றிருக்கும் என்பதனால், பல்வேறு நவீன டெக் வசதிகள், வாகனத்தின் நிலை, இருப்பிடம் உள்ளிட்டவற்றை இலகுவாக அறிய இயலும் வகையில் வசதிகள் கொண்டிருக்கும்.