Home Bike News ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் சிறப்புகள்

0

ஆக்டிவா 6ஜி

இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற இரு சக்கர வாகனங்களில் முதன்மையான இடத்தில் உள்ள ஹோண்டாவின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள வசதிகள் மற்றும் சிறப்புகள் உட்பட முந்தைய மாடலை விட கூடுதலான மாற்றங்கள் மற்றும் போட்டியாளர்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

பிஎஸ் 4 ஆக்டிவா 5ஜி மாடலை விட கூடுதலான விலையில் வந்துள்ள ஆக்டிவாவின் 6ஜி ஸ்கூட்டரில் குறிப்பாக 125சிசி மாடலில் இடம்பெற்றிருந்த முக்கிய வசதிகளை இந்த ஸ்கூட்டரும் பெற்றுள்ளது. இந்தியர்களின் முதல் தேர்வாக அமைந்துள்ள இந்த மாடலில் பெரிய அளவில் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிறுவனத்தின் ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 போன்ற பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற்ற மாடல்கள் 75,000 க்கு அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மூன்றாவது பிஎஸ் 6 மாடலாக இந்த ஸ்கூட்டர் வந்துள்ளது. பாரத் ஸ்டேஜ் 6 மாடலாக ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 26க்கு மேற்பட்ட காப்புரிமை பெற்ற நுட்பங்களை கொண்டதாக வந்துள்ள இந்த மாடல் ஜனவரி மாத இறுதி மற்றும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் விநியோகம் தொடங்க உள்ளது.

டிசைன்

விற்பனையில் கிடைத்து வந்த முந்தைய 5ஜி ஆக்டிவா மாடலின் தோற்ற உந்துதலை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வந்துள்ள ஆக்டிவா 6ஜி மாடலில் க்ரோம் கார்னிஷ், அகலமான இருக்கை, கால் வைக்கின்ற ஃப்ளோர் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டு நீல நிறம் இதுதவிர சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மற்றும் கிரே மெட்டாலிக் என மொத்தமாக 6 நிறங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்ப் ஆகியவை புதுப்பிக்கபட்டுள்ளது.

ஆக்டிவா 6ஜி என்ஜின்

முன்பாகவே பிஎஸ்4 கார்புரேட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ஆக்டிவா ஸ்கூட்டரில் 109.19 சிசி -க்கு மாற்றாக புதிய 109.51 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டாவின் eSP எனப்படுகின்ற நுட்பத்தை பெறுகின்ற  மூன்றாவது மாடலாக ஆக்டிவா 6ஜி வந்துள்ளது.

ஹோண்டாவின் eSP HET (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 7.90 hp பவரை மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.

முந்தைய மாடலை விட 10 சதவீதம் வரை மைலேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சிறப்பான மைலேஜ் வழங்குவது உறுதியாகியுள்ளது.

புதிய நுட்பங்கள்

குறிப்பாக முந்தைய மாடலை விட கவனிக்கதக்க அம்சங்களாக புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புற சஸ்பென்ஷனாக கொண்டிருப்பதுடன் 12 அங்குல வீல் கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான சஸ்பென்ஷனை ஆக்டிவா 6ஜி பெறுகின்றது.

இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள கிரவுண்ட் கிளியரண்ஸ் 18 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு தற்போது 171 மிமீ, 22 மிமீ கூடுதலாக வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதிக்கான அம்சத்தில் இதற்கான கீ லாக் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தில் அமர்ந்து கொண்டே பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம். பாஸ் லைட் சுவிட்ச், என்ஜின் கில் சுவிட்ச் போன்ற வசதிகள் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றது.

5ஜி மாடலில் செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்ட நிலையில், இதற்கு மாற்றாக அனலாக் கிளஸ்ட்டரை ஆக்டிவா 6ஜி பெற்றிருக்கின்றது. அனலாக் முறையில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவை அறிந்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள சென்சார் மற்றும் என்ஜின் போன்றவற்றில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுவதனை அறிய மால் ஃபங்ஷன் இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.

12 அங்குல ஸ்டீல் வீல் கொண்டுள்ள இந்த மாடலில் இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் அல்லது முன்புற டயரில் மட்டும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெறுகின்றது. இரு பக்க டயர்களிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இணைக்கப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர் பெற்று 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கை அடிப்பகுதி ஸ்டோரேஜ் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது.

ஆக்டிவா 5ஜி vs ஆக்டிவா 6ஜி

இரு மாடல்களுக்கு இடையில் டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், 12 அங்குல வீல் பெற்றதாக ஆக்டிவா 6ஜி வந்துள்ளது. ஆக்டிவா 5ஜி 10 அங்குல வீல் கொண்டிருந்தது.

முன்புறத்தில் ஹோண்டாவின் ஆக்டிவா 6ஜி-யில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளும் வசதி, பாஸ் லைட் சுவிட்ச், என்ஜின் கில் சுவிட்ச் ஆகியவற்றை பெற்றுள்ளது.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாடல்களான 110சிசி சந்தையில் கிடைத்த முதல் பிஎஸ்6 மாடலான டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்துகின்றது. அடுத்தப்படியாக விரைவில் வரவுள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் பிளெஷர் மற்றும் ஆக்செஸ் 110 போன்றவற்றுடன் போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

ஜூபிடர் கிளாசிக் மாடல் ரூ. 67 ஆயிரத்து 911 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கின்ற நிலையில், ஃபேசினோ 125 எஃப்ஐ மற்றும் ஆக்செஸ் 125 Fi போன்ற பிஎஸ்6 மாடல்களும் ஆக்டிவா 6ஜி டாப் வேரியண்டின் விலையில் துவங்குகின்றது. எனவே 110சிசி 6ஜி மாடலின் விலையில் 125சிசி ஸ்கூட்டரும் கிடைக்கின்றது. அதேவேளை இந்நிறுவனத்தின் 125சிசி ஆக்டிவா மாடலின் விலை ரூ.2,000 வரை மட்டுமே அதிகமாகும்.

விலை பட்டியல்

விற்பனையில் கிடைத்து பிஎஸ் 4 ஆக்டிவா 5ஜி மாடலை விட ரூ.7,000 முதல் அதிகபட்சமாக ரூ.8,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Fi என்ஜின், எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், மேம்பட்ட esp என்ஜின், ஸ்டார்ட் செய்யும் போது என்ஜின் சத்தமில்லாமல் இயக்கும் வசதி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் மாடலின் டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.67,135 மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.68,635 ஆகும். 125சிசி ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள ஒரு சில பிரீமியம் வசதிகளை தவிர மற்றபடி அனைத்தையும் 110சிசி என்ஜின் மாடலும் கொண்டுள்ளது.

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here