தொழில் வளர் தமிழ்நாடு எனும் பெயரில் நடைபெற்ற முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீனாவின் BYD எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், ஏதெர் எனெர்ஜி உட்பட பல்வேறு ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் கையழுத்தாகின.

தமிழக தொழில் துறை சார்பில் ‘தொழில் வளர் தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.2.55 லட்சம் கோடி முதலீட்டில் 11 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்அப் நிறுவனமான ஏதெர் எனெர்ஜி தற்போது சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் தனது முதல் ஏதெர் 450 மின்சார ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்துள்ளது. அடுத்த சில வருடங்களுக்குள் 30க்கு மேற்பட்ட நகரங்களில் தனது மாடல்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு வருவதுடன் குறைந்த விலை ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பெங்களூவில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு அருகிலே அமைக்கும் நோக்கில் தமிழகத்தின் ஓசூர் தொழிற்பேட்டையில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.634.5 கோடி முதலீட்டில் லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4300க்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் நேரடியாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.