வரும் ஜூன் 1, 2023 முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் விலை உயரத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இந்திய அரசு வழங்கி வந்த FAME-II மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே, வெளியிட்டிருந்த செய்தியில் ரூ.30,000 வரை ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் விலை உயரக்கூடும் என குறிப்பிட்டிருந்தோம்.

E2W Price hike

நடைமுறையில் உள்ள FAME-II மானியம் kWh ஒன்றுக்கு ரூ. 15,000க்கு பதிலாக இனி ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 40 சதவீத மானியத்துடன் ஒப்பிடும்போது, E2W இன் முன்னாள் தொழிற்சாலை செலவில் (ரூ. 1.50 லட்சத்தை தாண்டக்கூடாது) இனி 15 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

மே 21, 2023 வெளியிடப்பட்ட கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) அறிவிப்பின்படி, ஜூன் 11, 2021 தேதியிட்ட S.O.2258(E) இன் படி வெளியிடப்பட்ட அறிவிப்பின் ஒரு பகுதி மாற்றத்தில், இந்த திருத்தங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளது.

மூன்று வருட FAME-II மானியத்தின் கீழ், ரூ.10,000 கோடி செலவினத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கப்பட்டு ஜூன் 2021-ல் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் மானியம் திட்டத்தின் நடைமுறை மார்ச் 31,2024 வரை அமலில் இருக்கும்.

ஃபேம் இந்தியா தகவலின்படி,  மே 22, 2023 வரை இந்தியாவில் மொத்தம் 9,88,676 இருசக்கர மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. FAME II திட்டம் 10 லட்சம் EV இரு சக்கர வாகனங்கள், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், 55,000 இ-பயணிகள் வாகனங்கள் மற்றும் 7,090 மின்சார பேருந்துகளுக்கு மானியம் வழங்கியுள்ளது.

10 இலட்சம் இலக்கை நெருங்கிவிட்டதால் மானியத்தை நிறுத்தவேண்டிய நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு  மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத நிதியிலிருந்து E2W களுக்கு கூடுதலாக ரூ.1,500 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, ஏதெர் 450X மாடலுக்கு ரூ.55,000 மானியம் வழங்கப்படுகின்றது. புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்த உடன், இனி மானியம் ரூ. 32,500 மட்டுமே வழங்கப்படும். எனவே ஸ்கூட்டரின் விலை 22,500 வரை உயரக்கூடும். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஏதெர் உறுதிப்படுத்தியுள்ளது.