இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களுடைய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை அதிகபட்சமாக ரூ. 625 வரை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு உடனடியாப அமலுக்கு வந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
கடந்த நிதி ஆண்டில் 75 லட்சத்துக்கு அதிகமான இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹீரோ பைக் நிறுவனம் , தொடர்ந்து விற்பனையில் சிறப்பான பங்களிப்பினை வழங்குவதுடன், இந்த வருடத்தில் புதிதாக பிரிமியம் ரக சந்தையில் 200சிசி எஞ்சின் கொண்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் மாடலை விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிட உள்ளது.
அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக ரூ.625 வரை உயர்த்த வேண்டிய நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் மாடல் வாரியாக விலை உயர்வு குறித்த விபரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை.
தற்போது ரூ.37,000 முதல் ரூ. 1 லட்சத்துக்கு குறைந்த விலையில் வரையிலான 17 பைக்குகள் மற்றும் மூன்று ஸ்கூட்டர்கள் என மொத்தமாக 20 மாடல்களை இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.
சமீபத்தில் டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்த நிலையில், ஹீரோ நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளதால், விரைவில் மற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.