ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக மீட்டியோர் பைக்கினை அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த புதிய மாடல் புத்தம் புதிய 350சிசி என்ஜினை பெறுவது உறுதியாகியுள்ளது.
உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு கிடைத்து உள்ள மீட்டியோர் 350 என்ற பேட்ஜ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாடல் முந்தைய தண்டர்பேர்டு பைக்கின் மாற்றாக நிலை நிறுத்தப்பட்ட உள்ளது. இந்தியாவில் மட்டும் தண்டர்பேர்ட் பெயரை பயன்படுத்தி வந்த என்ஃபீல்டு சர்வதேச அளவில் ரூம்பலர் என்ற பெயரை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் 1950 களில் இந்நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்த பைக்கின் பெயரான மீட்டியோரை திரும்ப கொண்டு வந்துள்ளதால், சர்வதேச அளவில் இனி இந்த பெயரில் கிடைக்க உள்ளது.
எரிபொருள் டேங்கின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் உள்ளது. அதே நேரத்தில், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், வழக்கமான அதே வட்ட வடிவ ஹெட்லைட் கொண்டு ஸ்பிளிட் இருக்கை, கிராப் ரெயிலுடன் கவர்ச்சிகரமான மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.
சேஸைப் பொறுத்தவரை புதிய டபுள் கார்டில் அமைப்புடையதாக வழங்கப்பட்டு, புத்தம் புதிய 350 சிசி என்ஜினை பெறுகின்றது. இதுவரை பயன்படுத்தப்பட்டு வரும் யூசிஇ என்ஜினுக்கு விடைகொடுக்கப்பட்டு புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி SOHC உடன் வரவுள்ளது. கூடுதலான பவர் மற்றும் டார்க்குடன் சிறப்பான வகையில் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டு, பெருமளவு மீட்டியோரில் அதிர்வுகள் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள க்ரூஸர் ரக மீட்டியோரின் விற்பனைக்கு வெளியிடப்படும் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. நாடு முழுவதும் லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் என்ஃபீல்டு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கோவிட்-19 வைரஸ் தாக்குதல் நீங்கியப் பிறகு விற்பனைக்கு அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய கிளாசிக் 350 பைக் மாடலை சோதனை செய்து வரும் நிலையில் இந்த பைக் இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.