மாருதி சுசூகி நிறுவனம் 5 கதவுகளை கொண்ட ஜிம்னி எஸ்யூவி மாடலை நெக்ஸா டீலர்கள் வாயிலாக காட்சிப்படுத்த துவங்கியுள்ளது. முதன்முறையாக 2023 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காரை காட்சிப்படுத்திய இந்நிறுவனம் தொடர்ந்து முன்பதிவுகளை பெற்று வருகின்றது.

மாருதியின் குருகிராம் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள ஜிம்னி காரின் உற்பத்தி இலக்கு மாதம் 7,000 எண்ணிக்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். தற்பொழுது வரை 18,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை ஜிம்னி பெற்றுள்ளது.

மாருதி ஜிம்னி சிறப்புகள்

லேடர் பிரேம் சேஸ் கொண்ட ஜிம்னி எஸ்யூவி மாடலில் மாருதி சுசூகியின் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பெற்றதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்சமாக பவர் 105hp மற்றும் 134Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் கியர்பாக்ஸ் விருப்பங்களில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.

ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற சுசூகியின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த-ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஜிம்னி  காரில்  Zeta மற்றும் Alpha என இரண்டு டிரிம்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆறு ஏர்பேக்குகள், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், ரிவர்ஸ் கேமரா, ESP மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை நிரந்தரமாக கொண்டுள்ளது.

அடுத்தப்படியாக, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், 7.0 இன்ச் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் (9.0 இன்ச் ஆல்பா வேரியண்டில்) மூலம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் Arkamys சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை இரண்டு வேரியண்டும் பெற்றுள்ளது.

வரும் மே மாதம் ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஜிம்னி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தின் போது அதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா என இரண்டிலும் 5-கதவு கொண்ட மாடல் உருவாக்கப்பட்டு வருகின்றது. மாருதி சுசூகி ஃபிரான்ஸ் கூபே ஸ்டைல் மாடல் ஏப்ரல் மாதம் விலை அறிவிக்கப்பட உள்ளது.