Automobile Tamilan

பிஎஸ் 3 தடை : விற்பனை செய்யப்படாமல் 1.20 லட்சம் வாகனங்கள்

பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறைய தொடர்ந்து பிஎஸ் 3  வாகனங்களை விற்பனை செய்ய ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான 1.20 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது.

 பிஎஸ் 3  தடை

பைக்குகள், கார்கள் , மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை மார்ச் 31க்கு பிறகு பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் அதிரடியாக தடைவிதித்தது. ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 4 தர மாசு விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் மதிப்பு ரூபாய் 20,000 கோடியாகும்.

மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய இருதினங்களில் வாகன தயாரிப்பாளர்கள் அதிரடியாக வாரி வழங்கிய சலுகைகளை தொடர்ந்து 90 சதவீத வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாடுமுழுவதும் தற்பொழுது 1.20 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அதிரடியாக வழங்கப்பட்ட விலை குறிப்பினால் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய் 1200 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளது.

அதன் விபரம் 78,000 இருசக்கர வாகனங்கள்,  19,000 முன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் எண்ணிக்கை 44,000 ஆக உள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. அதிக அளவிலான பாதிப்பை வர்த்தக ரீதியான வாகன தயாரிப்பாளர்களே பெற்றுள்ளனர். விற்பனை செய்யப்படாமல் உள்ள வாகனங்களின் மதிப்பு ரூபாய் 5,000 கோடியாகும்.

இந்த வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதால் இலங்கை, நேபால் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version