தமிழகத்தில் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க அரசு முடிவு

0

Ashok-Leyland-Circuit-Electric-Bus.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை ஃபேம் திட்டத்தின் கீழ் அரசு மேற்கொண்டு வருகின்றது. கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 100 பேருந்துகள், சேலம், ஈரோடு, வேலூர் மற்றும் திருப்பூர் போன்ற மாவடங்களில் தலா 50 எலக்ட்ரிக் பஸ் உட்பட தஞ்சாவூர் மாவட்டத்திற்கு என 25 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Google News

சென்னையில் முதல் இரண்டு மின்சார பேருந்துகள் இந்த மாதத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் திருவான்மியூர்- சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு-பிராட்வே வழித்தடங்களில் இயக்கப்படும். தமிழகத்தின் பேருந்து உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் இந்த பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க உள்ளது.

மாநில அரசுகளிடம் இருந்து 14,988 பேருந்துகள் வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் திட்ட அமலாக்க மற்றும் ஒப்புதல் குழுவின் (பிஐஎஸ்சி) திட்டங்களின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்தின் எட்டு நகரங்களுக்கு 525 பஸ்கள் உட்பட இந்தியா முழுதும் 66 நகரங்களுக்கு 5,065 மின்-பேருந்துகளை அனுமதித்துள்ளது. இந்த வளர்ச்சி குறித்து தமிழக மூத்த போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இது எங்கள் பஸ் சேவையை நவீனமயமாக்கவும் மறுசீரமைக்கவும் உதவும்.” என குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 725 பேருந்துகள், உத்தரபிரதேச மாநிலத்துக்கு 600 பஸ்களும் வழங்கப்பட உள்ளது.

பேருந்தின் நீளத்தைப் பொறுத்து சராசரியாக ஒரு எலக்ட்ரிக் பஸ் விலை ரூ .1.50 முதல் ரூ .2 கோடி வரை மாறுபடுகின்றது. மேலும் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் வாங்குவதற்கு மத்திய அரசு ஃபேம் 2 ஆம் கட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ .55 லட்சம் மானியம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பேருந்துகள் அந்தந்த மாநில போக்குவரத்துக் கழகத்தின் மூலமாகவே இயக்கபடும் மற்றும் மாநில போக்குவரத்துக் கழங்களுக்கே சொந்தமானவை ஆகும்.

எனவே, அடுத்த சில மாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்குவது உறுதியாகியுள்ளது.