நார்டன் மோட்டார்சைக்கிள் கம்பெனி மற்றும் கைனெட்டிக் குழுமம் இணைந்து இந்தியாவில் நார்டன் டாமினேட்டர் மற்றும் நார்டன் கமாண்டோ ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களை அடுத்த 3-4 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நார்டன் இந்தியா வருகை

இங்கிலாந்து நாட்டின் நார்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் பைக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கைனெட்டிக் மற்றும் மஹிந்திரா என இரு நிறுவனத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் கைனெட்டிக் உடன் நார்டன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2015 ஆம் வருடத்தில் எம்.வி அகுஸ்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் எம்வி அகுஸ்டா பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்டது.

முதற்கட்டமாக அடுத்த 3 முதல் 4 மாதங்களில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யவும், எதிர்காலத்தில் இந்தியாவில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கைனெட்டிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.

நார்டன் நிறுவனம் கமாண்டோ 961 (Sport MK II மற்றும் Cafe Racer MK II இரண்டு வேரியன்ட்), டாமினேட்டர் மற்றும் சூப்பர் பைக் V4 RR ஆகிய நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இ.ஐ.சி.எம்.ஏ 2017 அரங்கில் கமாண்டோ 961 மற்றும் டாமினேட்டர்  ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தியுள்ளது.

நார்டன் டாமினேட்டர் மற்றும் கமாண்டோ ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களிலும் ஏர் மற்றும் ஆயில் மூலம் குளிர்விக்கும் 961 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 80 பிஎஸ் மற்றும் 90 என்எம் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாமினேட்டர் பாரம்பரிய தோற்ற உந்துதலை பெற்ற மிகவும் நவீனத்துவமான வடிவமைப்பை பெற்ற கிளாசிக் கஃபே ரேஸர் ஸ்டைலிங் மாடலாகும். நார்டன் டாமினேட்டர் ரூ.18 லட்சம் விலையில் இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

கமாண்டோ பைக்கில் ஸ்போர்ட் மற்றும் கஃபே ரேஸர் என இருவிதமான வேரியண்டில் வரவுள்ளது. நார்டன் கமாண்டோ ரூ.13-14 லட்சம் விலையில் இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

இரு மாடல்களும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.