Prawaas 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ கண்காட்சியில் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம், 3009L ஸ்கைலைன் ப்ரோ ஸ்டாஃப் ஏசி பஸ் மற்றும் ஐஷர் 20.15R 12 மீட்டர் அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டாம் ஆண்டு பிரவாஸ் 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 25 முதல் 27 வரை மும்பையில் நடைபெற்றது.
ஐஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரு பேருந்துகளும் பள்ளி, ஊழியர்கள், ரூட் பர்மீட் மற்றும் இன்டர்சிட்டி பயணத்திற்கு ஏற்றவையாகும். குறிப்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஐஷர் 20.15R எனப்படுகின்ற 12 மீட்டர் நீளமுள்ள அடிச்சட்டத்தில் உயர்ரக தரத்தில் வடிவமைக்கப்பட்டு சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும் பேருந்தாக வடிவமைக்க இயலும்.
மேலும் இந்த பேருந்தில் 6 வேக ஓவர் ரைடு கியர்பாக்ஸ் உடன் வால்வோ நிறுவனத்தின் EMS 3.0 என்ஜின் மேலாண்மை அமைப்பினை பெற்றுள்ளது. கூடுதலாக க்ரூஸ் கன்ட்ரோல், எரிபொருள் அளவினை நிகழ்நேரத்தில் அறிவது உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
அடுத்ததாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஐஷர் 3009L ஸ்கைலைன் ப்ரோ ஸ்டாஃப் ஏசி பேருந்தில் 2+1 இருக்கை வரிசை அமைப்புடன் மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு ஆடம்பரமான இருக்கைகளை பெற்றதாக விளங்குகின்றது.