ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் HBC அல்லது கைகெர் காம்பேக்ட் எஸ்யூவி உட்பட ரெனால்ட் ஸோயி எலெக்ட்ரிக் கார், F1 கான்செப்ட் என மொத்தமாக 12 கார்களை காட்சிப்படுத்த உள்ளது. இந்நிலையில் தனது முதல் ஆட்டோ எக்ஸ்போ டீசரை வெளியிட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 7 முதல் 12 வரை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள நிலையில் நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் உட்பட புதிய நிறுவனங்கள் என 60 க்கு மேற்பட்ட புதிய வாகனங்கள் வெளியிடப்பட உள்ளது.
ரெனால்ட் க்விட், ட்ரைபர் போன்ற கார்களின் CMF-A+ பிளாட்ஃபாரமில் வடிவமைக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி மாடலில் ஸ்டீயரிங் உட்பட பல்வேறு பாகங்கள் ட்ரைபரில் உள்ளதை பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக இந்த எஸ்யூவி காரின் முன்பக்க கிரில் அமைப்பு மற்றும் பம்பர் போன்றவை கேப்டூர் காரின் உந்துதலை பெற்றிருக்கலாம்.
சாதாரன வேரியண்டுகளில் 16 அங்குல வீல், சிறப்பான வீல்பேஸ் வழங்கப்பட உள்ளதால் தாராளமான இடவசதியை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாடல் சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா QYI எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆட்டோ எக்ஸ்போவில் மிகுந்த முக்கியத்துவம் தரும் வகையில், ரெனால்ட் ஸோயி என விற்பனை செய்யப்படுகின்ற 90 ஹெச்பி பவரை வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 41kWh பேட்டரி கொண்டு இயக்கப்படலாம். ஒர முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300-350 கிமீ ரேஞ்சை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் சர்வதேச அளவில் ஸோயி உட்பட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. சீன சந்தையில் காட்சிப்படுத்தப்பட்ட ரெனால்ட் க்விட் அடிப்படையிலான எலக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.