பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், டி-ராக், டிகுவான் ஆல் ஸ்பேஸ், டி-கிராஸ் மற்றும் எலக்ட்ரிக் ID.கிராஸ் போன்ற மாடல்களை காட்சிப்படுத்த உள்ளதாக தனது முதல் டீசரை வெளியிட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி
தற்போது இந்திய சந்தையில் கிடைத்து வருகின்ற டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ள டி-ராக் இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றதாக வரக்கூடும். இந்த மாடல் அதிகபட்சமாக 148bhp மற்றும் 250Nm டார்க் வழங்குவதுடன் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறக்கூடும்.
MQB பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கார் மிகவும் ஸ்டைலிஷான இரு வண்ண நிற கலவையுடன் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாகவும் ரூ.20 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த காருக்கு போட்டியாக ஹூண்டாய் டூசான், ஹெக்டர், காம்பஸ் போன்றவை விளங்கும். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்கும்.
வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல் ஸ்பேஸ் எஸ்யூவி
அடுத்ததாக இந்நிறுவனம் அடுத்த 6 மாதங்களுக்குள் வெளியிட உள்ள மற்றொரு எஸ்யூவி டிகுவான் ஆல் ஸ்பேஸ் 7 இருக்கை கொண்ட எஸ்யூவி ஆகும். இது தற்போது கிடைக்கின்ற மாடலின் தோற்ற வடிவமைப்பினை பெற்றிருந்தாலும் 7 இருக்கைகள், தாரளாமான இடவசதி கொண்டிருக்கும்.
இந்த எஸ்யூவி மாடலில் 178 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.